“இந்தியா உடனான உறவு மிக நெருக்கமானது” – ஷேக் ஹசீனா

“இந்தியா உடனான உறவு மிக நெருக்கமானது” – ஷேக் ஹசீனா

இந்தியா உடனான வங்கதேசத்தின் உறவு மிகவும் நெருக்கமானது என அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வாகி உள்ள ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் வெற்றி பெற்றதை அடுத்து, 5-வது முறையாக அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா தேர்வாகி உள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு டாக்காவில் உள்ள கனபாபன் என்ற தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது எங்கள் கவனம் இருக்கும். ஏற்கெனவே தொடங்கப்பட்ட அனைத்து பணிகளையும் நாங்கள் முடிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வோம்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதெல்லாம், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்குவோம். மக்களின் வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியுமே எங்களின் நோக்கம். நான் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பை மக்கள் எனக்கு வழங்கி இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

நான் ஒரு சாதாரண குடிமகள்தான். ஆனால், மக்கள் எனக்கு அளித்துள்ள பொறுப்பை நான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். தாயுள்ளத்தோடு நான் அவர்களைப் பார்த்துக்கொள்வேன். அவர்களுக்காக பணி செய்வேன். வங்கதேச மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மேம்பட பாடுபடுவதற்கு கிடைத்த வாய்ப்பு இது.

வங்கதேச மக்கள் இயற்கையாகவே திறமையானவர்கள். எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ப நாட்டின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன். 2041-க்குள் வளர்ந்த வங்கதேசத்தை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். திறமையான மக்கள்; திறமையான அரசு; சிறப்பான பொருளாதாரம்; சிறந்த சமூகம்… இவையே எங்கள் இலக்கு.

இந்தியா எங்களுக்கு மிகச் சிறந்த நட்பு நாடு. இந்தியா உடனான உறவு பக்கத்து வீட்டு கதவைப் போல மிகவும் நெருக்கமானது. வங்கதேசம் சுதந்திரத்துக்காகப் போராடிய 1971-லும், அதனைத் தொடர்ந்து 1975-ல் ஏற்பட்ட நெருக்கடியின்போதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது. எங்களுடன் இந்தியா சிறப்பான உறவு கொண்டிருப்பதற்காக பாராட்டுகிறேன். இந்தியா எங்களுக்கு மிக முக்கிய கூட்டாளி” என்று ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This