‘புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 2019-ல் பாகிஸ்தானை குறிவைத்த 9 ஏவுகணைகள்’

‘புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 2019-ல் பாகிஸ்தானை குறிவைத்த 9 ஏவுகணைகள்’

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக அதே ஆண்டு பெப்ரவரி 26-ம் திகதி பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் பாலகோட், முஷாபராபாத், சாகோட்டி ஆகிய 3 இடங்களில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தன. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பெப்ரவரி 27-ம் திகதி பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் இந்திய இராணுவ நிலைகளை தாக்க முயன்றன. அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன.

தமிழகத்தை சேர்ந்த விமானி: அப்போது இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானத்தை இயக்கிய தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். ரஷ்ய தயாரிப்பான மிக் 21, மூன்றாம் தலைமுறை போர் விமானம் ஆகும். அமெரிக்காவின் எப் 16 நான்காம் தலைமுறையை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஆகும். மிக் 21 போர் விமானம் மூலம் எப்16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.

எனினும் சண்டையின்போது இந்திய விமானி அபிநந்தனின் மிக் – 21 விமானம் சுடப்பட்டது. பாராசூட் உதவியுடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் தரையிறங்கியது பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாகும்.

பாகிஸ்தான் இராணுவம் அவரை சிறைபிடித்தது. அதற்கு முன்பாக தன்னிடம் இருந்த வரைபடம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அவர் அழித்துவிட்டார். அவரிடம் பாகிஸ்தான் இராணுவம் தீவிர விசாரணை நடத்தியபோதும் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தியாவின் நிர்பந்தம் காரணமாக 2 நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

தூதரக அதிகாரியின் புத்தகம்: விமானி அபிநந்தன் மீட்பு தொடர்பாக முன்னாள் இந்திய தூதரக அதிகாரி அஜய் பிஸாரியா, “anger management: the troubled diplomatic relationship” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த புத்தகத்தில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அஜய் பிஸாரியா எழுதிய நூலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்த காலத்தில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக நான் பணியாற்றினேன். கடந்த 2019-ம் ஆண்டு பெப்ரவரி 27-ம் திகதி நள்ளிரவு இந்தியாவில் பணியாற்றிய அப்போதைய பாகிஸ்தான் தூதர் சோகைல் முகமது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்த நேரத்தில் அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்தார்.

‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச விரும்புகிறார். அதற்கு ஏற்பாடுசெய்ய முடியுமா’ என்று சோகைல் முகமது என்னிடம் கேட்டார்.

நான் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச முடியாது. முக்கிய தகவல் என்றால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் கடிதம் அளிக்கலாம் என்று மூத்த அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இந்த தகவலைபாகிஸ்தான் தூதர் சோகைல் அகமதுவிடம் தெரிவித்தேன். அதன்பிறகு அவர் என்னை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.

அடுத்த நாள் காலையில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பேசினார். இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை. இந்திய விமானப் படைவிமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் அறிவித்தார்.

இம்ரான் கானின் முடிவுக்கு பின்னால் மிகப்பெரிய ரகசியம் ஒளிந்திருந்தது. ‘இந்திய விமானி அபிநந்தனை திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையெனில் விபரீதவிளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானை குறி வைத்து 9 அதிநவீன ஏவுகணைகள் நிறுத்தப்பட்டன. எந்த நேரம் வேண்டுமானாலும் ஏவுகணைகள் சீறிப் பாயும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியாவைச் சேர்ந்த தூதர்கள் பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தனர். விமானி அபிநந்தனை மீட்க எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா தயாராக இருக்கிறது. உடனே இந்திய விமானியை விடுதலை செய்யுங்கள் என்று இரு நாடுகளின் தூதர்களும் பாகிஸ்தானை எச்சரித்தனர். இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சமடைந்த பாகிஸ்தான் அரசு, விமானி அபிநந்தனை பத்திரமாக திருப்பி அனுப்பியது.

பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான முடிவால்தான் விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட்டார். இவ்வாறு அஜய் பிஸாரியா கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This