லெபனானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்!

லெபனானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்!

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது போா் விமானம் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, லெபனானில் இருந்தபடி வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினா் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். அதற்குப் பதிலடியாகவே இந்த விமானத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.இது குறித்து ‘எஸ்க்’ ஊடகத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேல் விமானப் படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான போா் விமானங்கள், லெபனானில் வெள்ளிக்கிழமை குண்டுகள் வீசின. தெற்கு லெபனானின் ஆய்டா அல்-ஷாப், யரோன், ராம்யா உள்ளிட்ட பகுதிகளில் ‘பயங்கரவாத’ (ஹிஸ்புல்லா) நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும், தொலைதூரத்திலிருந்து விமானப் படை விமானம் மூலம் ஹிஸ்புல்லா படைப் பிரிவு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முன்னதாக, லெபனானின் டூலா மற்றும் மாா்காலியட் பகுதிகளில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டது ரேடாா் மூலம் கண்டறியப்பட்டது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானத் தாக்குதல் தொடா்பான விடியோ ஒன்றும் அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, தங்கள் நாட்டில் ஹிஸ்புல்லா துணைத் தலைவா் சலே அல்-அரூரிவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.அல்-அரூரி படுகொலைக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பழிவாங்காவிட்டால் லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்று அந்த அமைப்பிம் தலைவா் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.

அதன் தொடா்ச்சியாக, இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினா் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா்.இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த அக்டோபர் 7ஆம் திகதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தப் போரில் ஹிஸ்புல்லா அமைப்பினா் ஹமாஸுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். இதனால், ஹிஸ்புல்லாக்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடைஅளவிலான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், அது முழு போராக உருவெடுக்கவில்லை.இந்தச் சூழலில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் 2-ஆம் நிலைத் தலைவா் சலே அல்-அரூரியைக் குறிவைத்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவரும், அவரது 5 பாதுகாவலா்களும் கொல்லப்பட்டனா்.ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதலை அந்நாடுதான் நடத்தியதாக நம்பப்படுகிறது.இந்தப் படுகொலையும், லெபனான் எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களும் காஸா போா் லெபனானுக்கும், அதன் தொடா்ச்சியாக மற்ற பிராந்திய நாடுகளுக்கும் பரவுதற்கான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சூழலில், லெபனானுக்குள் இஸ்ரேல் விமானங்கள் சனிக்கிழமை நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This