ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!
ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 16 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணம், அனாமிசு நகரை மையமாக கொண்டு நேற்று பிற்பகல் 4 மணி அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிக்டர் அலகில் 7.6 ஆக பதிவானது. அடுத்த சில நிமிடங்களில் 6.2 ரிக்டர், 5.2 ரிக்டர் என அடுத்தடுத்து பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 80 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக அனாமிசு, சுசூ, வாஜிமா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. இஷிகாவா மாகாணத்தின் பல பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக தடைபட்டது.
மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டதால் இஷிகாவா, நிகாட்டா, டோயாமா ஆகிய மாகாணங்களின் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த 3 மாகாணங்களில் கடற்கரை பகுதிகளில் 3 அடி முதல் 16 அடி உயரம் வரை சுனாமி பேரலைகள் எழுந்தன. பல்வேறு கிராமங்கள், நகரங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. சில இடங்களில் மிகப்பெரிய அளவில் தீ விபத்துகள் நேரிட்டு உள்ளதாக அமைச்சர் யோஷிமா ஹயாசி தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய பூகம்பங்கள் தொடரக்கூடும். சுனாமி அச்சுறுத்தலும் தொடர்ந்து நீடிக்கக்கூடும். பூகம்ப,சுனாமி அச்சுறுத்தல் ஒரு வாரம்வரை நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று ஜப்பான் புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
புகுஷிமா அணு மின் நிலைய பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு ரிக்டர் அலகில் 3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அணு மின் நிலையத்துக்கு எவ்விதபாதிப்பும் ஏற்படவில்லை.
இஷிகாவா மாகாணத்தில் இருந்து 560 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. வடகொரியா, தென்கொரியா, ரஷ்யாவின் சில பகுதிகளுக்கும் அந்தந்த அரசுகள் சார்பில் சுனாமிஎச்சரிக்கை விடுக்கப்பட்டது.