வேலை செய்யும் இடங்களில் உடலுறவு

வேலை செய்யும் இடங்களில் உடலுறவு

வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய மக்களுக்கு புட்டின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களுக்கு புட்டின் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற சதவீதம் என்ற அளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் தற்போது இது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

1999-க்கும் பிறகு தற்போது ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு முதல் பாதியில் பிறந்த குழந்தைகளை விட தற்போது 2024 முதல் பாதியில் 16 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் உக்ரைன் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் தொகை வீழ்ச்சி 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெண்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு மருத்துவ சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

செல்யாபின்ஸ்க் பிராந்தியம் 24 வயதிற்கு உட்பட்ட பெண் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், முதல் குழந்தைக்கு 8500 டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. கருத்தடைக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தட்யான்யா புட்ஸ்கயா முதலாளிகள் அவர்களுடைய பெண் ஊழியர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வலியுறுத்தும் கொள்கைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அரசியல்வாதியான அன்னா குஸ்னெட்சோவா, பெண்கள் 19 அல்லது 20 வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “ரஷ்ய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி… நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி” என புட்டின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This