சூரத்தில் விநாயகர் சிலை மீது கல்வீசிய 33 பேர் கைது
குஜராத்தின் சூரத் நகரில் விநாயகர் சிலை மீது கல் வீசப்பட்ட சம்பவத்தால் போராட்டம் நடந்தது. இதையடுத்து 33 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அங்கு 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தின் சூரத்நகரில் உள்ள சையத்புரா பகுதியில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அங்கு விநாயகர் சிலைவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விநாயகர் சிலை மீது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் நேற்று கல் வீசினர்.
இச்சம்பவத்தையடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். அப்பகுதியில் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஆய்வு: இந்நிலையில் சம்பவ இடத்தை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கி பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘விநாயகர் சிலை மீது கல் வீசிய 6 பேரும், அவர்களை ஊக்குவித்ததாக 27 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்தால் சூரத் நகர் முழுவதும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது’’ என்றார்.
ம.பி.யிலும் கல்வீச்சு: மத்தியப் பிரதேசம் ரத்லம் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது இதேபோன்ற கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.