கணிப்பாளர் கணக்கில் கமலா ஹாரிஸ் வெற்றி; டிரம்ப் தரப்புக்கு அதிர்ச்சி
‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்’ என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார்.
உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார்.
தேர்தல் வந்தாலே தேர்தல் கணிப்பாளர்களுக்கு வேலை வந்துவிடும். நவம்பர் 5ம் திகதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு, பிரபல தேர்தல் கணிப்பாளர் ஆலன் லிச்மேன் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார். இதுவே எனது கணிப்பு முடிவு. அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்.என கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை உறுதி செய்ய, 13 கேள்விகளுக்கு விடை தெரிந்தால் போதும். அந்த வகையில், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக 8 புள்ளிகளும், டிரம்புக்கு எதிராக 5 புள்ளிகளும் உள்ளன.
இரண்டு கேள்விகளுக்கான விடை டிரம்புக்கு சாதகமாக மாறினாலும், எனது பார்முலாவின்படி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவை போதுமானதாக இருக்காது. இதனால் டிரம்ப் வெள்ளை மாளிகையை அடைய முடியாது. என்றும் அவர் கூறியுள்ளார்.