பணயக் கைதிகள் மீட்பில் தோல்வி; இஸ்ரேலில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

பணயக் கைதிகள் மீட்பில் தோல்வி; இஸ்ரேலில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிபட்ட 6 பேரின் உடல்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஏராளமானோர் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தை மேற்கொண்டனர்.

டெல் அவிவில் 300,000 பேர் கூடினர் என்றும் மேலும் 200,000 பேர் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் பங்கேற்றதாகவும் அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Crowd Solutions நிறுவனம் டெல் அவிவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 280,000 பேர் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளது, இது கிட்டத்தட்ட 18 மாதங்களில் மிகப்பெரிய பேரணியாக இருக்கும். காவல்துறையின் அதிகாரப்பூர்வ எண்கள் எதுவும் இல்லை.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் ஒக்டோபர் 7 தாக்குதல்களின்போது ஹமாஸால் பிடிக்கப்பட்ட எஞ்சிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்ட போதுமான அளவு முயற்சிகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக முன்னெடுக்கப்பட்டது.

எனினும், டெல் அவிவில் ஒரு பெரிய நெடுஞ்சாலையை மக்கள் தடுத்து, பொலிஸ் தடுப்புகளையும் உடைத்தனர்.

இதனிடையே, ஒரு பெரிய இஸ்ரேலிய தொழிலாளர் சங்கமான ஹிஸ்டாட்ரூட், திங்களன்று (02) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, பணயக் கைதி ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

ஆறு உடல்கள் மீட்பு

தெற்கு காஸாவின் ரஃபா பகுதியில் உள்ள நிலத்தடி சுரங்கப் பாதையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) முன்னதாக தெரிவித்தன.

பணயக் கைதிகள் கார்மல் காட், ஈடன் யெருஷால்மி, ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின், அலெக்சாண்டர் லோபனோவ், அல்மோக் சருசி மற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் ஓரி டானினோ என மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டு
சனிக்கிழமையன்று படையினர் அவர்களை அடைவதற்கு சற்று முன்பு அவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது.

இது ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்புகளைத் தூண்டியது, மீதமுள்ள பணயக் கைதிகளைக் காப்பாற்றத் தவறியதாக மக்கள் அரசாங்கத்தையும் நெதன்யாகுவையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டினர்.

ஹமாஸுடன் போர் நிறுத்தக் கோரிக்கை

ஏறக்குறைய 11 மாதங்களுக்கு முன்பு காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன.

போராட்டக்காரர்கள், எஞ்சியுள்ள கைதிகளை நாட்டுக்கு அழைத்துவர பலஸ்தீனிய குழு ஹமாஸுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரினார்.

பல இஸ்ரேலியர்கள் டெல் அவிவில் வீதிகளை மறித்து மேற்கு ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய இராணுவம் காஸா மீதான அதன் போரில் குறைந்தது 40,738 பேரைக் கொன்றது மற்றும் 94,154 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் காலக்கட்டத்தில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின்போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 250 பேர் குழுவால் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டும் உள்ளனர்.

CATEGORIES
Share This