சீனாவில் கர்ப்பமாகும் கார்கள்! காரணம் சூரியனா?
சீனாவில் வெயிலில் நிறுத்தப்படும் கார்கள் திடீரென வீங்கிவிடுவதாககவும் காரணம் சூரியன்தான் என்றும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பரவியிருக்கின்றன.
எல்லா கார்களும் அல்ல, சீன தயாரிப்பு கார்களுக்கே இந்த நிலை ஏற்படுவதாகவும் சில உள்ளூர் மக்கள் பதிவிட்டுள்ளனர்.
உலக வெப்பமயமாதல் குறித்து உலகமே ஒருபக்கம் பேசிக்கொண்டும் மறுபக்கம் மேலும் வெப்பமயமாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கும் வேளையில், சீனாவில் கார்கள் கர்ப்பமடைவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
சீனாவில் தற்போது கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், சாலையில் நிறுத்தப்படும் கார்கள் திடீரென இப்படி வீங்கி விடுகின்றனவாம். இந்த புகைப்படங்களைத்தான் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, கார்கள் கர்ப்பமாகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையில் என்ன நடக்கிறது என்றால், உள்ளூரில் தயாரிக்கப்படும் கார்களில் அடிக்கப்படும் பெயிண்டுகள்தான் வெயிலில் இப்படி உப்பி விடுவதாகக் கூறுகிறார்கள் அந்நாட்டு மக்கள்.
சில கார்கள் முன்பக்கத்தில் இப்படி வீங்கிவிட்டால் அதனை ஓட்ட முடியாத நிலை ஏற்படுவதாகவும் ஒரே இடத்தில் பல கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பல கார்களும் இப்படி உப்பியிருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சிலரோ, சீனாவில் தயாரிக்கப்படும் கார்கள் மட்டும் கர்ப்பமடைவதாகவும் கருத்திட்டுள்ளனர்