கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு: உணவுப்பொதி ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது
இந்தியா, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அங்கன்வாடி எனப்படும் தாய் சேய் நல மையத்தினால் சத்துணவு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 3 வயதுடைய குழந்தைகள் ஆகியோருக்கு பொதி செய்யப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறிருக்க சங்கிலி மாவட்டம் பாலஸ் பகுதிக்குட்பட்ட மையத்தில் கடந்த திங்கட்கிழமையன்று கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட உணவுப்பொதியில் சிறிய வகை பாம்பொன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின்படி, சங்கிலி மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பில் விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த தாய், சேய் நல மையத்தை ஆய்வு செய்து கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட உணவுப் பொதியை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளில் இவ்வாறு விஷமுள்ள உயிரினம் இறந்து கிடந்தமை அந்தப் பகுதியிலுள்ள மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.