ஆபிரிக்க நாடுகளில் கடும் மழை: நைஜீரிய சிறைச்சாலையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்புயோட்டம்
நைஜீரிய தலைநகருக்கு அருகில் சுலேஜா எனும் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இருந்து சுமார் 118 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் பல மணி நேரம் நீடித்த மழையால் சிறைச்சாலையின் சில பகுதிகள், மதில்கள் உடைந்து விழுந்ததன் காரணமாக இவ்வாறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தப்பிச் சென்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 10 பேர் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் உதவியுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான மக்கள் நடமாட்டங்கள் இருக்குமாயின் உடனடியாக பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கைதிகளின் அடையாளங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சிறைச்சாலைகள் பேச்சாளரினால் வழங்கப்படவில்லை.
இதனிடையே, கடந்த காலங்களில் போகோ அராம் எனும் இஸ்லாமிய கிளர்ச்சிக் குழிவின் உறுப்பினர்கள் சுலேஜா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த சிறைச்சாலையில் காணப்படும் நெரிசல், நிதி பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கைதிகள் தப்பிச் செல்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.