சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை – யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்
சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “அரசறிவியலாளன் இதழ் 6” நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுதந்திரக் காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. இந்தியா ஒரு பெரிய நாடு.
எத்தனையோ மொழிகளையும், எல்லைகள் அனைத்திலும் பயங்கரமான பிரச்சினைகளைக் கொண்டதொரு நாடு. ஆனால் அங்கு எல்லாமிருக்கிறது.
தமிழ் மக்கள் தங்கள் பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்காகப் புரட்சிதான் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி விட்டு நான் வீட்டுக்குச் செல்லமுடியாது.
யூதர்கள் அல்லது பலஸ்தீனியர்கள் முன்னர் எங்குக் கண்டாலும் தங்களின் அடுத்த சந்திப்பு ஜெருசலேமில் என்று கைதட்டுவார்கள்.
நாங்கள் எங்களின் அடுத்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று கைதட்டுகின்றோமா? தற்போது தேசியம் கதைக்கிறவர்கள் ஆசியாவிலேயே பிஸியானவர்கள். வாழ்வதோ கொழும்பில். லண்டன் குடியுரிமையும் கொண்டுள்ள அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்புரிமையையும் கொண்டுள்ளனர்.
பலஸ்தீனம் போன்று எமது மண் பறிபோகவில்லை. நாங்கள் தற்போது பலஸ்தீனியர்கள் போன்று அகதி முகாம்களில் இருக்கவில்லை.
எங்கள் தாய்நிலத்தைப் பாதுகாப்பதற்கான போதிய அறிவு எம் மத்தியிலுள்ளது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் புரிந்துணர்வுப் பண்பு ஒவ்வொருவருக்கும் தேவையானதொன்று. ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றார்.