வெடுக்குநாறிமலை விவகாரம்: காவல்துறையினரின் நடவடிக்கை அடாவடித்தனமானது – டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறிமலை விவகாரம்: காவல்துறையினரின் நடவடிக்கை அடாவடித்தனமானது – டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிரான காவல்துறையினரின் நடவடிக்கைகள் அடாவடித்தனமானதென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பளைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் நீதிமன்ற அனுமதியுடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களையும் அவர்களின் வழிபாட்டையும் அவமதிக்கும் வகையில் காவல்துறையினர் செயற்பட்ட விதம் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமையாகும். இதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம். இந்த விடயத்தை அமைச்சரவையின் அவதானத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், எதிர்காலத்தில் காவல்துறையினர் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெடுக்குமாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நீதிமன்ற அனுமதியுடன் வழிபடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான காவல்துறை செயற்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழர்கள் மீதான அடுக்குமுறைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

எனவே, வழிபாட்டு உரிமையையும், வாழ்வதற்கான உரிமையையும் மறுத்து தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைதியை விரும்பும் சர்வதேச அமைப்புகள் உடனடியாகக் கண்டிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்த முன்வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தாம் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நேற்று அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு சென்ற நிலையில் காவல்துறையினர் தங்களை இடைமறித்ததாக அவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

பின்னர் மாலை 6 மணியுடன் வழிபாடுகளை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பணித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் உழவு இயந்திரம் ஒன்றின் ஊடாக காவல்துறையினர் அங்கிருந்த பொருட்கைள எடுத்து சென்றதுடன் இதன்போது தாம் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This