காணொளி போலியானவை: சச்சின் டெண்டுல்கர் மறுப்பு!
கேமிங் செயலியை நான் விளம்பரப்படுத்துவது போன்று உருவாக்கப்பட்டுள்ள காணொளி போலியானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
“பணம் சம்பாதிப்பது இவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. எனது மகளே இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்.” என்று அந்த செயலிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் பேசுவது போல காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியினை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர் அந்த காணொளி போலியானது என்று கூறியுள்ளதுடன், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது,
“இந்த காணொளிகள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது.
இது போன்ற போலியான காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த விவகாரங்களில் சமூக ஊடகங்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். புகார்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். தவறான தகவல் மற்றும் போலி காணொளிகள் பரவுவதைத் தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமானது.” என்று தெரிவித்துள்ளார்.