இந்தியாவின் புதிய பிரதமராக தமிழர்?

இந்தியாவின் புதிய பிரதமராக தமிழர்?

தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி சென்று விட்டார்.

முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்தாா்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வேண்டும் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர், அண்ணாமலை பிரதமராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த தலைவர்களை இதுபோன்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும்.

பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதமர் வேறு யாரும் இல்லை; பிரதமர் மோடிதான் அவர் எனவும் ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அமித் ஷா கூறியது பிரதமர் மோடியை மனதில் வைத்துகூட இருக்கலாம் எனவும் கலாய்த்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This