

வட, கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் யார்?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி ஆக்கிரமிப்பும் ,இன,மத அடையாள அழிப்பும் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் கீர்த்தி தென்னகோன் என்பவர் தலைமையில் இடம்பெறுவதனால் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு தெரியாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் கூற முடியாதென இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி ,இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி ஆக்கிரமிப்பும் ,இன,மத அடையாள அழிப்பும் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தமக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் குறிப்பிட முடியாது.
ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் கீர்த்தி தென்னகோன் என்பவர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.ஆகவே இது தனக்கு தெரியாது என ஜனாதிபதி வழமை போல் குறிப்பிட முடியாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மற்றும் கிழக்கு ஜனாதிபதி செயலணி என்பதொன்றை ஸ்தாபித்தார்,அதன்மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தென்பகுதி மீனவர்கள் கொக்குளாய் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் சொந்த வீடுகள் உள்ளன ஆனால் இவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமிழர்களின் நிலங்களை வழங்க அரச தரப்பினர் விசேட கவனம் செலுத்துகின்றனர்.
இதேவேளை இந்தியா காரைக்கால் முதல் இலங்கை காங்கேசன்துறை வரை கப்பல் சேவையை முன்னெடுக்க இருதரப்பாலும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.இராமேஸ்வரத்திற்கும்,தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் சேவை ஏற்கெனவே இருந்தது.புவியியல் ரீதியில் இராமேஸ்வரத்திற்கும்,தலைமன்னாருக்கும் இடையில் 18 கிலோமீற்றர் கடல் மைல் தூரமே காணப்படுகிறது.ஆனால் பாண்டிச்சேரிக்கும்,காங்கேசன்துறைக்கும் இடையிலான கடல் மைல் தூரம் 56 கிலோமீற்றராக காணப்படுகிறது.ஆகவே மூன்று மடங்கு அதிகமான தூரத்தை கொண்டுள்ள காரைக்கால்- காங்கேசன்துறை கப்பல் சேவையை ஏன் ஆரம்பிக்க வேண்டும்?
இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை காணப்பட்டது.இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது இவ்விடயம் தொடர்பில் கதைத்த போது இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் வாக்குறுதி வழங்கினார்.ஆனால் தற்போது மாறுப்பட்ட முறையில் காரைக்கால்- காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட துறைசார் தரப்பினர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.