

வெடுக்குநாறிமலை விவகாரம்; ரணில் பேசுவார்
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் கருத்து முன்வைத்த போதே ஜனாதிபதி இதனை கூறியதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, வெடுக்குநாறிமலையில் ஆதிலிங்கேஸ்வரர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இந்த விடயத்தை கூறினார்.
அதன்போது அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போது பதிலளித்த ஜனாதிபதி, புத்தாண்டின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழங்கு காணப்படுகின்றமை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார் என்றார்.