சென்னையில் 7ஆம் திகதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்!

சென்னையில் 7ஆம் திகதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (மார்ச்) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒருவர் பெயரில் மட்டுமே அனைத்து மனுக்களும் தாக்கலாகி இருந்ததால், போட்டியின்றி அவர் தேர்வாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து இருந்ததால், தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் திகதி காலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அன்று மாலையே அவர் கட்சியின் 7ஆவது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, வரும் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This