

உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் குழு பிரதமரை சந்தித்தது !
உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது.
மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களும் நேற்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களும் மாவட்டச் செயலர்களும் கண்காணித்து முன்பைப் போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.