பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!

பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலிகளில் ஒன்றான McDonald’s இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடவுள்ளது.

புதிய சுற்று ஆட்குறைப்பு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பியது. மெக்டொனால்டு இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், இதனால் பணிநீக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

McDonald’s மின்னஞ்சலில், “ஏப்ரல் 3 வாரத்தில், நிறுவனத்தில் உள்ள பணியாளர் நிலைகள் தொடர்பான முக்கியமான கடினமான முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்போம்.” என்று கூறிய நிலையில், இந்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து தனிப்பட்ட சந்திப்புகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துரித உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்டு, புதுப்பிக்கப்பட்ட வணிக மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கார்ப்பரேட் பணியாளர்களின் திறனை மதிப்பாய்வு செய்வதாக ஜனவரி மாதம் கூறியது. இது சில துறைகளில் பணிநீக்கங்களுக்கும், சில துறைகளில் விரிவாக்கத்திற்கும் வழிவகுக்கும். புதன்கிழமைக்குள் பணிநீக்கங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட நிறுவனங்கள் முயற்சிப்பதால் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. கூகுள், அமேசான் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்தில் தங்கள் செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துள்ளன.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவிலான பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் ஆசிய நாட்டவர்களும் உள்ளனர். தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். மேலும் புதிய விசாவைப் பெற இன்னும் சிறிது காலம் உள்ள நிலையில், வேலையில்லாமல் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்கள், அவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய புதிய வேலை கண்டுபிடிக்காமல் போனால், 60 நாட்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்டொனால்டு உலகளவில் 150,000 க்கும் மேற்பட்ட நபர்களை கார்ப்பரேட் பணிகளிலும் மற்றும் அதன் சொந்தமான உணவகங்களிலும் பணியமர்த்தியுள்ளது. இதில் 70% மாற்பட்ட உணவகங்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This