

இலங்கையின் இந்து பாரம்பரியத்துக்கு ஆபத்து; 800 இந்து கோவில்கள் அழிப்பு!
இலங்கையில் இந்து பாரம்பரியம், இலங்கை அரசாங்கத்தால் தவிர்க்க முடியாமல் அழிக்கப்படுவதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்ட தமிழர் நடவடிக்கை குழுவான தமிழ் டயஸ்போரா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து சுமார் ஆயிரத்து 800 இந்து கோவில்கள் மற்றும் பாரம்பரிய தளங்களை அழித்த பின்னர், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இந்து கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் தற்போது இலக்கு வைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளளது.
கீரிமலையில் ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில், இராணுவ ஆக்கிரமிப்பின் மறைவின் கீழ் அழிக்கப்பட்டுள்ளதுடன், இடிக்கப்பட்ட கோவிலுக்கு பதிலாக, அங்கு ஒரு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்துக்கள், இறந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்யும் இடம், யோகியின் பழங்கால நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் முழு நாட்டிலும் உள்ள இந்துக்களுக்கு புனிதமான தன்மையை கொண்ட இடத்தை இலங்கை அரசாங்கம் இழிவுப்படுத்தியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கான சர்வதேச உதவிகளை வரவேற்கும் தமது அமைப்பு, நாட்டின் பண்டைய இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அந்த உதவியை பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்ட தமிழர் நடவடிக்கை குழுவான தமிழ் டயஸ்போரா அமைப்பு கோரியுள்ளது.