வட, கிழக்கு மாகாணங்களில் விரைவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

வட, கிழக்கு மாகாணங்களில் விரைவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் மத குருமார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஊடாக இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கள் மற்றும் பங்காளிக் கட்சி தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் நாடாளுமன்ற அரங்கம் என்ற அமைப்பை உருவாக்கும் நோக்குடனேயே இந்த செயற்பாடு இடம்பெறுகிறது.

இதுகுறித்து கடந்த காலங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும் அன்று நிலவிய அரசியல் சூழல் காரணமாக குறித்த முயற்சி சாத்தியமாகவில்லை.

தற்போது அதற்கு சாதகமான அரசியல் சூழல் உருவாகி வருகின்றது என தாம் எண்ணுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This