

ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுபடுத்த ஜனாதிபதி முயற்சி; சாடும் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
தெஹிவளையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சில உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து, தமக்கான ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருகின்ற போதிலும், அது சாத்தியப்படாது என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பணமில்லாத இந்த அரசாங்கம், அவர்களது பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முயற்சிக்கின்றது.
ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணைய தயாராக உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமும், வரிகளை அதிகரிப்பதன் மூலமும், வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் மூலமும் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.
இதுதவிர, அரசாங்கம் அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருவதாகவும்,அதையும் தாண்டி புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து தொழிற்சங்க தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.