

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் இணைகிறதா? மனோ வழங்கிய பதில்!
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
அரசாங்கத்தில் இணையவேண்டுமா அல்லது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் தாங்களே தீர்மானித்துக்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இதுதொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென மனோ கணேசன் தெரிவித்தார்.
நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தேவையான விடயங்களுக்காக அரசாங்கத்துக்கு தமது ஆதரவு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்திருந்துதான் மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்ற சூழல் உருவானால் அதனை கவனத்தில் கொள்வோம் என்றும், ஆனால் அவ்வாறான சூழல் தற்பொழுது உருவாகவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.