ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பு  – அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பு – அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆதிலிங்கம் உள்ளிட்ட சிலைகள் சேதமாக்கப்பட்டு அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், வவுனியா நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் இந்தவிடயம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, எதிர்வரும் 10 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் திகதியிட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸ்  பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும், தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில், தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும், கடந்த வருடம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவானால் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 26 ஆம் திகதி, ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம்அகழ்ந்து எடுக்கப்பட்டு வீசப்பட்டிருந்ததுடன், பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் தகர்க்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வவுனியாவில் கண்டனப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்தார்.

எனினும், இதுவரையில், சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய  புனராவர்த்தன புனர் கும்பாபிஷேகம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையின் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்  மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு அந்தரீத புனராவர்த்தன புனர் கும்பாபிஷேகம் நாளை ஞாயிறு அதிகாலை சிவஸ்ரீ வை.கு.ஜெயசுத குருக்கள்  தலைமையில் நடைபெறும்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் இந்துமத விவகார  இணைப்பாளர் DR.சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, உதவிக்குருக்கள்  பிரம்மஸ்ரீ  ஈசன் செந்தில் நாத குருக்கள்  ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.  ஆலய அறங்காவலவர் சபையினர் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதேநேரம் இங்கே பிரதிஸ்டை செய்யும் விக்கிரகங்கள் அனைத்தும் சிவபூமியின் ஆறு.திருமுறுகனால் வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This