

பாகிஸ்தானில் இந்து மருத்துவர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் மருத்துவர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் மருத்துவரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அவருடன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவரும் சென்றார். கராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த மருத்துவர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் காரில் பயணம் செய்த பெண் மருத்துவர் உடலிலும் குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் காரில் உயிருக்கு போராடினார். இது பற்றி அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்த பெண் மருத்துவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.