ஏறாவூர் பலசரக்குக் கடையில் தீ; பெண்ணும் சிறுவர்களும் உயிர் தப்பினர்

ஏறாவூர் பலசரக்குக் கடையில் தீ; பெண்ணும் சிறுவர்களும் உயிர் தப்பினர்

ஏறாவூர் நகரின் புன்னைக்குடா வீதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றின் பலசரக்குகள் களுஞ்சியப் பகுதி நேற்று (30) மாலை திடீரென தீப்பற்றிக் கொண்டது.

அந்தக் கடையிலும் அயலிலுள்ள கடைகளிலும் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது இந்தத் தீ விபத்து இடம்பெற்றது.

பலத்த வெடிச் சத்தங்களுடன் தீ பற்றிக் கொண்டு, கரும்புகை மூட்டம் எழுந்ததால் வீதியிலும் சுற்றியுள்ள கடைகள், வீட்டுப் பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிச் சத்தங்களுடன் கரும்புகை வெளிக்கிளம்ப அந்தப் பல சரக்குக் கடைத் தொகுதியின் மேல் மாடியில் வசித்த பெண்ணும் சிறுவர்களும் கூக்குரலிட்டு உடனடியாக முன் பகுதிக்கு ஓடி வந்தபோது உதவிக்கு விரைந்தோரால் அவர்கள் ஏணி வைத்து இறக்கிக் காப்பாற்றப்பட்டனர்.

அந்தக் கடைத் தொகுதியில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற போது, வெல்டிங் செய்த தீப்பொறிகள் பட்டாசுகளில் பட்டு, உடனடியாகவே பட்டாசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தீ அருகிலுள்ள கடைகள், வீடுகளுக்கு மேலும் பரவாமல் உதவிக்கு விரைந்தோரால் தீ அணைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் குறித்த கடையிலிருந்த பால்மா, அரிசி மற்றும் சோடா உள்ளிட்ட இன்னும் பல பொருட்கள் தீயில் கருகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
Share This