

இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கம்!
இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது.
டுவிட்டர் கணக்கை முடக்க மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்பூர்வ கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கணக்குகளை முழுமையாக நிறுத்திவைக்க டுவிட்டர் நிறுவன வழிமுறைகள் அனுமதிக்கின்றன.
அதன்படி பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @GovtofPakistan இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா தவிர அமெரிக்கா, கனடா போன்ற இதர நாடுகளில் இருந்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மற்றவர்கள் தொடர்ந்து பார்க்கவும், பின்பற்றவும் முடியும்.
எனினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் பட்சத்தில், அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் திரையில் தோன்றுகிறது. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.