

வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகள் பறிமுதல்!
மிராபயந்தர் மாநகராட்சியில் வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தானே மாவட்டம் மிராபயந்தர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான சொத்து வரி நகரில் மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 977 பேரிடம் ரூ.227 கோடியே 80 லட்சம் வரையில் இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது.
இதுவரையில் ரூ.155 கோடியே 49 லட்சம் அளவிற்கு வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதி ரூ.72 கோடியே 31 லட்சம் அளவில் செலுத்தவேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு கடிதம் மூலமான அறிக்கை அனுப்பப்பட்டது. இருப்பினும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருபவர்கள் மீது மாநகராட்சி கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்பேரில் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது.
இதன்படி 262 குடியிருப்புவாசிகளின் சொத்துகள் பறிமுதல் செய்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்த சொத்துக்களை ஏலம் விடப்பட்டு வரி வசூலிக்கப்படும். நடப்பு ஆண்டில் வரி வசூல் 68 சதவீதமாகவும், நிலுவை தொகையை வசூலிக்க கமிஷனர் அறிவுறுத்தலின்படி சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக என மாநகராட்சி துணை கமிஷனர் சஞ்சய் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.