எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கப்போகும் முதல் தமிழ் பெண்!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கப்போகும் முதல் தமிழ் பெண்!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க சிறுவயதில் இருந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரின் கனவு விரைவில் நனவாக உள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் தவசியம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி. சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட இவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வருகிறது.

இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்செல்வி பயிற்சி மேற்கொண்டார். அதன்படி கடந்த 8ஆம் திகதி மகளிர் தினத்தன்று திருப்பெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ் செல்வி சாதனை படைத்தார்.

இதேபோல் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியையும் தனி பெண்ணாக சென்று முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார்.

இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார். எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டி அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன்படி தற்போது முத்தமிழ் செல்வி உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க நிதி உதவியாக தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This