

பிரான்ஸில் ஆர்ப்பாட்டம் வன்முறையாகியது; 447 பேர் கைது!
பாரிஸ் நகரில் பொலிசாரின் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்பூகை குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ஓய்வூதிய வயது சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் சுமார் 50 கிராமங்கள் மற்றும் நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ் தெருக்களில் பாரிஸ் நகரின் கிழக்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்ததையடுத்து கலவரத் தடுப்பு பொலிசார் தடியடி நடத்தியுள்ளனர்.
பல பகுதிகளில் கடைகளின் ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டு, தெருவில் அமைக்கப்பட்டுள்ள மரச்சாமான்களும் அடித்து நொறுக்கப்பட்டன. கருப்பு உடையணிந்து குழு ஒன்று கலவரங்களில் ஈடுபடுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி தீவிர இடதுசாரி ஆர்வலர்களும் வன்முறையில் ஈடுபடுவதாக பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பிரான்ஸ் தெருக்களில் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள கலவரக்காரர்களுக்கு எதிராக 13,000 பொலிசாரை களமிறக்கியுள்ளதாக உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் தார்மானின் அறிவித்துள்ளார்.
விவசாயிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் களமிறங்கிய பின்னரே, போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது என பொலிஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.