செங்கலடி இராஜபுரம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; பல வீடுகளுக்கு சேதம்

செங்கலடி இராஜபுரம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; பல வீடுகளுக்கு சேதம்

செங்கலடி பதுளை வீதி, இராஜபுரம் கிராமத்தில் நாளுக்கு நாள் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதன் காரணமாக வீடுகள் மற்றும் பயன்தரும் மரங்கள் பல சேதமடைந்துள்ளன.

மரப்பாலம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட இராஜபுரம் கிராமத்தில் காட்டு யானைகள் மக்கள் குடிமனைப் பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் வீட்டு உடமைகளும் தோட்டப் பயிர்களையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

அண்மைக்காலமாக இரவுநேரங்களில் குடிமனை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளையும் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாழை, மா, பலா உட்பட பல பயன்தரும் மரங்களைப் பிடுங்கிச் சேதப்படுத்தியுள்ளன.

குறித்த கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்பட்டு பராமரித்துவந்த வீடுகளையும் பயன்தரும் மரங்களை, தொடர்ந்தும் யானைகள் சேதப்படுத்தி வருவதால், வாழ்வாதாரத்தை இழந்து விரக்தி நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீடுகளையும் உடமைகளையும், தோட்டங்களின் பயிர்களையும் அடிக்கடி காட்டு யானைகள் மிக மோசமாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பல்வேறு நட்டங்களுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் மரப்பாலம் கிராமத்தில் மாலை நேரத்தில் விவசாயி ஒருவர் யானையின் மோசமான தாக்குதலுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல தடவைகள் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறைப்பாடு தெரிவித்தும் எந்த வித நடவடிக்கைளும் மேற்கொள்ள வில்லையென கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றர்னன.

எனவே, குறித்த கிராம மக்களையும் வீடுகள் மற்றும் வீட்டுத்தோட்டங்களையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

CATEGORIES
Share This