

தேர்தலை ஒத்திவைக்க அரசு போடும் திட்டம்; பெப்ரல் கடும் எதிர்ப்பு
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு குழுவொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்க முடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்குமானால், தேர்தல் மேலும் பிற்படுத்தப்படும் என்பது தெளிவாகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாள் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ராேஹன ஹெட்டியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபைகளை கண்காணிப்பதற்கும் உள்ளூராட்ச்சி மன்றங்களை கண்காணிப்பதற்கும் குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் பிரேரித்திருப்பதாக தெரியவருகிறது.
எந்தவொரு தேர்தலையும் அண்மைக்காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எந்த தயாரும் இல்லை என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது.
அதேபோன்று கண்காணிப்பு குழு அமைப்பதன் மூலம் நிறைவேற்றுத்துறை இந்த நிறுவனங்களின் அதிகாரங்களை மீண்டும் தனது கையில் வைத்துக்கொள்ளும் நிலையே ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமை ஜனநாயக நாடொன்றுக்கு எந்தவகையிலும் பொருத்தம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.