

சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி; ஐக்கிய மக்கள் சக்தி உறுதி!
பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எண்ணுகின்றார் எனவும் யார் வேட்பாளரானாலும் சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அஷோக அபேசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதாகும். பொதுஜன பெரமுனவிலுள்ள கொள்ளையர்களுடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர் எண்ணுகின்றார். ஐ.தே.க.வில் மாத்திரமல்ல. எந்த கட்சியில் யார் வேட்பாளரானாலும் சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றுள்ளமை மகிழ்ச்சிகுரியதாகும். எனவே தான் வெளிநாட்டு தூதுவர்களையும் , இராஜதந்திரிகளையும் அழைத்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். எவ்வாறிருப்பினும் நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்பதற்காக மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.