ஆதிசிவன் ஆலயம் முற்றாக அழிப்பு; கண்டுகொள்ளாத தமிழ் எம்.பிக்கள்! யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

ஆதிசிவன் ஆலயம் முற்றாக அழிப்பு; கண்டுகொள்ளாத தமிழ் எம்.பிக்கள்! யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் நேற்றையதினம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என என சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டிலே மிக நீண்ட காலமாக தமிழர்களின் இனப்பிரச்சினை புரையோடிப்போயுள்ளது. குறிப்பாக தமிழர்களின் தொன்மங்களாக இருக்கும் சிவ வழிபாட்டு தளங்கள் போருக்கு பின்னர் அழித்து வரும் நிலையில் மிக அண்மையில் மிக உக்கிரமாக அழிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையி்ல் ஆதிசிவன் ஆலயத்தில் அனைத்து சிலைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

2017 க்கு பின்னர் இவ் ஆலய வழிபாட்டிற்கு பல தடைகள் மற்றும் பரிபாலன சபையினர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றது. இதைவிட நீதிமன்ற உத்தரவையும் மதிக்காது பொலிசார் நடந்து வருகின்றனர்.

இதற்கு நீதியான விசாரணையை கோருகின்றோம். மிக சில நாட்களுக்கு முன் குருந்தூரில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை சிவலிங்கம் ஆய்வுக்குட்படுத்தாது விகாரையின் உச்சியில் நிறுவியுள்ளனர்

தொல்பொருள் திணைக்களம் அரச இயந்திரங்களின் ஆதரவோடு நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வெவ்வேறு நடவடிக்கைகளுக்காக கருத்து வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் ஏராளமான சைவசமயத்தவர்கள் இருக்கையில் எந்தவொரு உறுப்பினர்களும் கருத்துக்களை வெளியிடவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் கடந்துள்ள நிலையில் ஒரேயொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே நேரில் சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கின்றார்.

இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனங்கள் எதிர்ப்புக்கள் எதையும் காணவில்லை. எனவே இவ்விடத்தில் காட்டமான கருத்தை பதிவு செய்கின்றேன்.

கன்னியா வெந்நீருற்றும் அநுராதபுர காலத்திற்குரியதென அச்சிடப்பட்டு தொல்லியற் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் மீட்கப்பட வேண்டும்.

யுனெஸ்கோ என்ற மரபுரிமை மையம் காணப்படுகையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை செங்கல் கூட வாங்க முடியாமல் கடனில் சிக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கையில் இவ்வாறான சம்பவங்களை மேற்காண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு இந் நிலைகள் தொடர்பான விடயங்களை முன்வைக்க வேண்டும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரே எமது பழமைச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. பொலன்னறுவை உட்பட பல்வேறு பிரதேசங்களில் சிவன் கோயில்கள் காணப்படுகின்றன.

கன்னியா, வெடுக்குநாறி, கீரிமலை போன்ற கோயில்களே தமிழ்ப் பெயரிலே காணப்படுகின்றன.

முல்லைத்தீவிலும் வன்னியிலும் மன்னாரிலும் சைவத்தமிழர்கள் பல்வேறு விதமாக தொடர்ந்தும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருநீறு பூசுவதையும் நடராஜர் சிலை வைப்பதையும் பற்றி பேசும் நாக்கள் இந்த விடயங்களில் கரிசனை கொள்வதில்லை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையிலே நாம் போராட்டத்தை மேற்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை நிறுத்த அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென சர்வதேசத்திற்கு ஒரு செய்தியினை சொல்கின்றோம்.

எனவே நாளைய தினம் 4 மணிக்கு நல்லூர் ஆலயச் சூழலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். – என்றார்

CATEGORIES
Share This