

கூகிள் வரைபடத்தில், வட்டமான பர்வத விகாரையாக மாறிய வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்!
வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் அமைவிடம் அமைந்துள்ள பகுதியானது கூகுள் வரைபடத்தில் தற்போது வட்டமான பர்வத விகாரை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு எனும் சிறிய கிராமத்திலையே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமையப் பெற்றுள்ளது. வடக்கே நெடுங்கேணியும், கிழக்கே ஒலுமடுவும்,தெற்கே நொச்சிக்குளமும், மேற்கே நயினாமடுக் கிராமத்தினையும் எல்லையாகக் கொண்ட ஒலுமடு பாலமோட்டை கிராமத்திலே அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு சுமார் 200 தொடக்கம் 300 அடி உயரத்தில் தொண்மை வரலாற்றைக் கொண்ட மலையின் உச்சியிலையே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்நிலையில் யுத்த காலத்திலே வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள அவ் இடத்தில் வசித்த மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர்.
இந்நிலையில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்தது. அத் தடைகளையும் தாண்டி இவ் ஆலயத்தில் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில் 2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இவ்வாலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர்.
இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்காள்ள அனுமதித்தனர். ஆனால் கோயிலை புனரமைக்கவோ மறுசீரமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம்(26) காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மறுபுறம் குறித்த இடத்தின் பெயரும் வட்டமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.