

ஏப்ரல் 25 இல் தேர்தல் இடம்பெறாது என்கிறார் முஜுபூர் ரஹ்மான்!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியும் தேர்தல் இடம்பெறாது எனவும் மீண்டும் தேர்தலை பிற்போடுவதற்கான சந்தர்ப்பமே காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முஜுபூர் ரஹ்மான், தேர்தலுக்கான நிதியை அரசாங்கம் வழங்க மறுப்பது தேர்தலை மேலும் தாமதமாக்கும் என்று தெரிவித்தார்.
அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமிக்க அரசாங்கம் முயற்சிப்பதுடன், அந்த குழுக்களில் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் முஜுபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.