

தமிழகம் முழுவதும் 76 இடங்களில் காங்கிரசார் போராட்டம்!
ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சத்தியாகிரக போராட்டம் நடத்தும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. சென்னையில் 7 மாவட்டங்கள் உள்ளன. இந்த 7 மாவட்டங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் திருவொற்றியூர், காலடிப்பேட்டை காந்திசிலை அருகில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடந்தது. வடசென்னை மேற்கு மாவட்டத்தில் மூன்று சிலை, பெரம்பூர் மார்க்கெட் அருகில் மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு தலைமையில் நடந்தது.
மாநில துணைத்தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, இமையா கக்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடந்தது. திருநாவுக்கரசர் எம்.பி., கார்த்தி ப சிதம்பரம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் அண்ணா வளைவு, அமைந்தகரை அருகில் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் நடந்தது. டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டார். தென்சென்னை மத்திய மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி வளைவு, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி., கோபண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். தென்சென்னை கிழக்கு மாவட்டத்தில் தேனாம்பேட்டை, மகாகவி பாரதி சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி அருகில், காந்தி சிலை முன்பு நடந்தது. மாவட்ட தலைவர் அடையார் துரை தலைமை தாங்கினார். கே.வி.தங்கபாலு, ஆர்.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்சென்னை மேற்கு மாவட்டத்தில் போரூர் ஈ.பி. அருகில் தளபதி எஸ்.பாஸ்கர் தலைமையில் நடந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிவரை நடக்கிறது. கட்சி மாவட்டங்கள் மொத்தம் 76 உள்ளன. இதில் சென்னை தவிர மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, நாகர்கோவில் உள்பட 69 இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.