சர்வதேசத்தின் அறிவுறுத்தலை செவிமடுக்காத கோட்டா பொறுப்பு கூறவேண்டும்

சர்வதேசத்தின் அறிவுறுத்தலை செவிமடுக்காத கோட்டா பொறுப்பு கூறவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புகூறவேண்டும் என பொதுஜன பெரமுன தெரிவிக்கின்ற நிலையில் பொருளாதார பாதிப்பு தொடர்பில் சர்வதேசம் வழங்கிய அறிவுறுத்தல்களை செவிமடுக்காத கோட்டா தலைமையிலான அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்மென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியதாக புலனாய்வுத் தகவல் கிடைக்கப் பெற்றும் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை,
எனவே குண்டுத் தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அமைச்சரவை பொறுப்புக் கூற வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின் பொருளாதார பாதிப்பு தொடர்பில் சர்வதேசம் வழங்கிய அறிவுறுத்தல்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை,எனவே பொருளாதார பாதிப்புக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

10 பிரதான நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த காலங்களை போன்று இம்முறையும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற முடியாது. 2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மொத்த தேசிய உற்பத்திகளை 2.3 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் குறுகிய காலத்திற்குள் தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்திகளை குறுகிய காலத்திற்குள் அதிகரித்துக் கொள்வது இலகுவானதொரு காரியமல்ல,சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி பெருமை கொள்வது அவசியமற்றது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் நிலையை காண்பித்துள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This