ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க.பயந்து – தமிழக முதலமைச்சர்

ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க.பயந்து – தமிழக முதலமைச்சர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், பாராளுமன்ற உறுப்பினருக்குக்கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை. ராகுல் காந்தி பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில், சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்திக்கு வழங்கி இருக்கிறார்.

‘வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்’ என்றும் சொல்லி இருக்கிறார். மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார்.

அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. உயர் நீதிமன்றில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதி தீர்ப்பை வழங்க வேண்டியது உச்ச நீதிமன்றமாகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23ஆம் திகதி தீர்ப்பு, 24ஆம் திகதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. ராகுல் காந்தியை பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது என்றார்.

CATEGORIES
TAGS
Share This