

கனேடிய தூதுவர் கிழக்கு ஆளுனரிடையே விசேட சந்திப்பு
கிழக்கில் முதலீடு செய்யுமாறு கனேடிய உயர்ஸ்தானிகர் தமிழ் புலம்பெயராளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளுக்கு உள்ளான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும் அமுல்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (23) காலை தன்னைச் சந்திக்க வந்த கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷிடம் (Eric Walsh) தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தங்களுடன் சகவாழ்வும் நல்லிணக்கமும் உள்ளதா என கனடாவில் வாழும் இலங்கை மக்கள் அடிக்கடி கேட்பதாக உயர்ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்தப் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டவுடன் தீர்வாக மேற்படி குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக ஆளுநர் பதிலளித்தார்.
பின்னர் குழுவின் அறிக்கையின் பிரதியை உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் வழங்கினார்.
இது தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தாம் வழங்கியுள்ளதாகவும், அதற்கு அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
இதன் போது, கனடாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழ் மக்களை கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் ஆளுநரிடம் கேட்டறிந்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் பலனாக இன்று திருகோணமலைக்கு இலகுவாக விஜயம் செய்ய முடியும் என ஆளுநர் மேலும் பதிலளித்தார்.
இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.