மரண தண்டனை அதிர்ச்சி கொடுத்துள்ள உகாண்டா!

மரண தண்டனை அதிர்ச்சி கொடுத்துள்ள உகாண்டா!

உலகின் பல முற்போக்கான நாடுகளில் ஓரினச்சேர்க்கை உறவுகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஆப்பிரிக்க நாடான உகாண்டா LGBTQ சமூகத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, உகாண்டாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவின் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உகாண்டா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவில், ஓரினச்சேர்க்கை அடையாளத்தை வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன், தீவிர ஓரினச்சேர்க்கை வழக்குகளில், மரண தண்டனையும் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான விதிகளை மீறினால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா சட்டமாக்க குடியரசுத் தலைவரின் கையெழுத்து அவசியம். இந்த மசோதாவின்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் அல்லது எச்ஐவி தொற்று இருந்த போதிலும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஒரு ஆணை மணக்கும் ஆண் அல்லது பெண்ணை மணக்கும் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்த மசோதா இப்போது உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரே ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர். 2013 ஆம் ஆண்டில், உகாண்டாவில் இதேபோன்ற சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு மற்றும் உள்ளூர் நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு அதைச் செயல்படுத்த முடியவில்லை.

இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்றும், தாய், தந்தை என இயற்கையான முறையில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதாகவும் கூறி, அதை ஏற்க கூடாது என பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This