

சிங்கள பௌத்த நாடு என்பதை சர்வதேச மட்டத்திற்கு விரிவுபடுத்த முஸ்தீபு
இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த நாடு என்பதனை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்துவதன் நிகழ்ச்சி நிரலே, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தொடர்பான கடற்படையின் பதாகை அமைப்பு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் அண்மையில் பௌத்த விகாரை அடையாளபடுத்தல் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு, குறித்த பகுதி வெடியரசன் கோட்டை என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
நெடுந்தீவு வாழ் மக்கள், பாரம்பரியமாக அதனை வெடியரசன் கோட்டை என்றே அடையாளபடுத்தி வருகின்றார்கள்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் இது சிங்கள பௌத்ததிற்கு உரியது என்ற போர்வையில் பௌத்த சிங்கள மயமாக்கல் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, தற்போது கடற்படையினருடைய அத்துமீறலும் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காணப்படுகின்றது.
தாங்கள் அங்குள்ள இறங்கு துறைமுகத்தில் பதாகைகளை புகைப்படம் எடுப்பதற்கு கூட பல்வேறுப்பட்ட தடைகளை கடப்படையினர் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.