

பறிபோய்க்கொண்டிருக்கும் தமிழரின் அடையாளங்கள்; தமிழ் தலைமைகளின் மௌனத்துக்கு காரணம் என்ன?
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமான வடக்கு-கிழக்கு பகுதியில் தமிழ் மக்களின் கலாசார மரவுரிமைகளை அழித்தும் அவற்றை திரிவுபடுத்தியும் பௌத்த மயமாக்கல் என்னும் வேலைத்திட்டம் மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.ஆனால், இவற்றுக்கு எதிராக தமிழர் தரப்பு தொடர்ந்தும் மௌனம் காத்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தொல்பொருள் திணைக்களம் தமிழரின் சைவ ஆலயங்கள் மீது கைவைக்கும் அதேவேளை,ஒருசில தரப்புகள் தமிழரின் நிலங்களை கையகப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.சிங்கள மக்கள் வாழாத பிரதேசத்தில் நாவற்குழியில் விகாரை,வெடுக்குநாரி மலை, குருந்தூர்மலை, உருத்திரபுரம் சிவன் கோவில், நிலாவரை நல்ல தண்ணி கிணறு போன்ற இடங்களை பௌத்தமயமாக்கல் மற்றும் நெடுந்தீவு பகுதியிலுள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெடியரசன் கோட்டையானது புராதன பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அடையாளப்படுத்தி, அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள சம்பவம் என சில வாரங்களுக்குள் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால்,இந்தவிவகாரங்கள் தொடர்பில் தமிழர்களின் தலைமைகள் என கூறிக்கொள்வோர் இந்த விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறார்கள்.
இதனை தொடர விடுவது ஆபத்தானது என சமூக ஆர்வலர்களும் தமிழ் மக்களும் கடும் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.எனவே உடனடியாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ் தலைமைகள் முன்வரவேண்டுமெனவும் தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தென்னிலங்கையின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வரவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்சமயம் தமிழர் தேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் இன அழிப்புடன் பின்னிப்பிணைந்த செயற்பாடுகளாகும்.தனியான மொழி,கலாசார பண்பாடுகளை கொண்ட தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றை அழிப்பதனூடாக அவர்களின் தனித்துவம்,அடையாளத்தை அழித்து நாடு முழுவதையும் சிங்கள தேசமாக மாற்றும் ஒரு ஏற்பாடே தற்சமயம் இடம்பெறுவதாகவும் இதற்கு தமிழர் தேசம் சோர்ந்துபோய்விடாது தைரியமாக எதிர்கொள்ளவேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றை முழுமையாக தடுத்து நிறுத்தி தமிழர் தாயகத்தையும் தமிழ் மக்களின் தொன்மையையும் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.அதற்கான வேலைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.