தோட்டத் தொழிலாளர் மையத்தின் தலைமையில் கறுப்புப் போராட்டம்

தோட்டத் தொழிலாளர் மையத்தின் தலைமையில் கறுப்புப் போராட்டம்

பெருந்தோட்ட மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றக் கோரி, பெருந்தோட்டங்கள் முழுவதும் இன்று புதன்கிழமை (22) கறுப்புப் போராட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுவதாக தோட்டத் தொழிலாளர் மையம் தெரிவித்துள்ளது.

“பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டுரிமை வழங்குங்கள்; மக்களை ஏமாற்றும் பொய் பிரசாரங்கள் வேண்டாம்” என்ற தலைப்பில், இந்தக் கறுப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

“பெருந்தோட்ட மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இன்றுடன் (22) 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும், அவர்களுக்கான அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை ” என குறித்த மையம் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், “தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதிகளவான மக்கள் இன்னும் சிறிய லயன் அறைகளிலேயே வாழ்கின்றார்கள். அவர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளத்தையாவது வழங்க வேண்டும். இந்த நாட்டின் அரசாங்கங்கள், பெருந்தோட்ட மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்யவில்லை” என தொழிலாளர் மையம் கூறுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த மொழியில் பேசக்கூடிய வகையில், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பல இடங்களில் இல்லை எனவும் தோட்டத் தொழிலாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு வாக்குரிமை மாத்திரமே இருப்பதாகவும் தோட்டத் தொழிலாளர் மையம் சாடுகின்றது.

CATEGORIES
Share This