பசறையில் கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி!

பசறையில் கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி!

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று (20) காலை 7.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஹொப்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் குறித்த நபர் இன்று காலை பாடசாலைக்கு செல்ல தயாராகி தனது மகிழுந்தை வீட்டிலிருந்து வெளியே செலுத்திய வேளையில், அது அருகிலிருந்த பள்ளத்தின் ஊடாக பசறை-பிபிலை பிரதான வீதியில் விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மூன்று வருடங்களுக்கு முன் இதே பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This