

தமிழ் மக்களின் போராடத்திற்கு ஆதரவாக வசந்த முதலிகே வந்து நிற்பாரா?; நிலாந்தன் எழுப்பிய கேள்வி!
வடக்கு கிழக்கு தாயகத்தில் அரசாங்கத்தின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அதற்கு எதிராக போராடும் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே வந்து நிற்பாரா? என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகளாவது வந்து நிற்குமா? என்று நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் அவ்வாறான போராட்டங்களுக்கு எவரும் ஆதரவு தரப்போவதில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதாலேயே அவர்கள் இன்று தமிழ் மக்களை நோக்கி வந்திருப்பதாக நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் வசந்த முதலிகே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கோரியிருந்ததாகவும் ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருந்ததாக நிலாந்தன் மேலும் தெரிவித்திரந்தார்.
ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை தங்களோடு இணைத்துக் கொள்வதிலேயே அதிக கவனம் இருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.
பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருந்ததாகவும் வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறியிருந்ததாக நிலாந்தன் குறிப்பிடுகின்றார்.
சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எவ்வாறு சேர்ந்து போராடுவது என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளளதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த முதலிகேயின் யாழ் வருகை தற்போது தோல்வியடைந்துள்ள நிலையில் ரணிவிக்கிரமசிங்கவிற்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நிலாந்தன் மேலும் தெரிவித்தள்ளார்.