

தாக்குதல் நடத்தி அடக்க முயலும் ரணில்; ராஜபக்ச அரசு; இதுவரை மூன்று பேர் பலி!
போராட்டக்காரர்களைத் தாக்குதல் நடத்தி அடக்க முயலும் ரணில் – ராஜபக்ச நிழல் அரசை மக்கள் ஒன்றிணைந்து ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ வலியுறுத்தினார்.
டொலர் விலை குறைந்துள்ள போதிலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. பொருட்களின் விலைகள் குறையவில்லை.
32 வீதமான மக்கள் உண்ண உணவின்றி உள்ளனர். கடந்த வாரங்களில் குடும்பம் குடும்பமாக பல தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எல்லாம் வறுமை, கடன் காரணமாக இடம்பெற்றவை. வாழ வழியில்லாமல் அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையை இலாபமீட்டும் சபையாக மாற்றி அதை விற்பதே இதன் நோக்கம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திப்போடுவதை நாம் எதிர்க்கின்றோம். அந்த உரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதன் மீது தாக்குதல் நடத்துகின்றது அரசு.
அந்தத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.