இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் வன்முறை ; பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை!

இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் வன்முறை ; பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 2 வழக்குகளில் பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலகத்தில் கொடுக்காமல் அதை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் நீதிமன்ற பிடிவாரண்டு பிறப்பித்தது.

அதே போல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பேரணியில் நீதிபதி மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இம்ரான்கானை நாளை வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் ஜமான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு இஸ்லாமாபாத் பொலிசார் சென்றனர். அவர்கள் இம்ரான்கான் வீட்டுக்கு முன்பு குவிந்து இருந்தனர். இதற்கிடையே இம்ரான் கான் தான் பேசும் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம். பாகிஸ்தான் மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போரிட வேண்டும். என்னை கைது செய்துவிட்டால் நாடு தூங்கிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதை நீங்கள் தவறு என்று நிரூபிக்க வேண்டும். நான் இல்லாமல் கூட உங்களால் போராட முடியும் என்று நிரூபியுங்கள். கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார். நான் உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்று தெரிவித்தார்.

இம்ரான்கானை பொலிசார் கைது செய்வதை தடுக்க அவரது தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டுக்கு முன்பு திரண்டிருந்தனர். அவர்கள் இம்ரான் கான் வீட்டை சுற்றி நின்றனர். அவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்லாமல் அங் கேயே இருந்தனர்.

திடீரென்று பொலிசார் மீது கற்கள் வீசப்பட்டன. டயர் உள்ளிட்ட பொருட்களை வீதியில் போட்டு எரித்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து இம்ரான் கான் கட்சியினர் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடியும் நடத்தினர்.

இதனால் அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில் கட்சி தொண்டர்கள் பலர் காயம் அடந்தனர். அதே போல் டி.ஐ.ஜி. உள்பட பொலிசாரும் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர். சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு வன்முறை கட்டுக்குள் வந்தது. இருந்தபோதிலும் தொண்டர்கள் பலர் அப்பகுதியிலேயே சுற்றி வருகிறார்கள். இதையடுத்து இம்ரான் கான் வீடு உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. பொலிசார் 8 மணி நேரம் போராடியும் இம்ரான்கானை கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா, பைசலாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலை முதல் இம்ரான்கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் வீதிகளை மறித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This