

தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே!; திகாம்பரம் தெரிவிப்பு
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அத்தினத்தில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு ஆரம்பத்தில் அறிவித்தது. அதன்பின்னர் ஏப்ரல் 25 என அறிவிப்பு விடுக்கப்பட்டது. இவ்வாறு அறிவிப்புகள் வெளிவந்தாலும் தேர்தல் நடைபெறுமா என்பதில் எமக்கு சந்தேகம்தான் உள்ளது.
எது எப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும்.
இலங்கையில் உள்ள பெண்களில் பெருந்தோட்ட அதிகளவு கஷ்டப்படும் பெண்கள் தோட்டப்பகுதியிலேளே உள்ளனர். எனவே, தமது பிள்ளைகளுக்கு கல்வி செல்வத்தை வழங்கி அவர்களை வேறு தொழில்களில் தாய்மார் ஈடுபடுத்திவருகின்றனர். – எனவும் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.